திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை: 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு
அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தேங்காய் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூர் ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராசேந்திரன்(48). அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அடிக்கடி தேங்காய்கள் திருடுபோயுள்ளது. இந்நிலையில் தென்னந்தோப்பில் திருடுபோன தேங்காய், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கடையில் விற்பனைக்கு இருந்ததைப் பார்த்த வெங்கட்ராமன், கடைக்காரரிடம் விசாரித்தபோது, கூலித்தொழிலாளி ராசேந்திரன் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராசேந்திரனை அழைத்த வெங்கட்ராமன் மற்றும் சிலர் தேங்காய் திருடியதற்கு அபராதமாக ரூ 2 ஆயிரம் கட்டவேண்டும், இனிமேல் தோப்புக்குள் நுழையக்கூடாது என ராஜேந்திரனிடம் கண்டித்தனர். மேலும், ராசேந்திரன் மனைவி பெரியநாயகியிடம் உன் கணவன் தேங்காயை திருடியுள்ளதாகவும் அபராதம் கட்டவேண்டும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே உள்ள. புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேராவூரணி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்கொலை செய்து கொண்ட ராசேந்திரனின் உறவினர்கள், ராசேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கு வெங்கட்ராமன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மிரட்டியதுதான் காரணம், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ. இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் பேராவூரணி வசந்தா, சேதுபாவாசத்திரம் சக்திவேல் ஆகியோர் மேற்கொண்ட விசாரணைக்குப்பின்னர், வெங்கட்ராமன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.