பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தரிசு நில மேம்பாட்டு பயிற்சி
அட்மா திட்டத்தின் கீழ் பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தரிசு நில மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம், அட்மா திட்டத்தின் கீழ், தரிசு நில மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில், 40 விவசாயிகள் கலந்து கொண்டு தரிசுநில மேம்பாடு தொடர்பான பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியில் விவசாயிகள் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பாலசரஸ்வதி மற்றும் பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் திருவையாறு எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவன வேளாண் விஞ்ஞானி சுதாகர் கலந்துகொண்டு தரிசு நிலங்கள் எவ்வாறு உருவாகின்றன. தரிசுநிலங்களை அடையாளம் காணுதல், தரிசுநிலங்களை சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்றும் தொழில்நுட்பங்கள், தரிசுநில சாகுபடியால் விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக பயிற்சி அளித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில் தரிசுநில மேம்பாட்டிற்காக வேளாண்மை துறையின் மூலம் அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்தார். மேலும் உழவன் செயலி மூலம், எவ்வாறு அரசு திட்டங்களில் பதிவு செய்வது மற்றும் தொழில்நுட்ப செய்திகளை எவ்வாறு தெரிந்துகொள்ளுதல் தொடர்பான செய்திகளை விவசாயிகளுக்கு கூறினார்.
விவசாயிகள், பயிற்சி நிலைய துணை இயக்குநர் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிகள் செயல்விளக்கங்கள் கண்டுணர் சுற்றுலாக்கள் மற்றும் விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் பயிற்சிகள் பற்றி எடுத்துக் கூறினார். பாபநாசம் வட்டார அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியா அனைவருக்கும் நன்றி கூறினார் .பயிற்சி ஏற்பாடுகளை, பாபநாசம் வட்டார அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.