குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்
குறவர் சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழகம் கூட்டத்தில் தீர்மானம்
பாபநாசம் தாலுக்கா மதகடி பஜார் பகுதியில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வழக்கறிஞர் உத்தம குமரன் தலைமை வகித்து குறவர் சமூக மக்களின் குறைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. குறவர் சமூக மக்களின் அடிப்படை வசதிகளை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும். குடமுருட்டி பாலம் விரிவாக்கம் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சாலையோரத்தில் வசித்து வரும் குறவர் சமூக மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். மூங்கில் கூடை, ஏணி மரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் குறவர் சமூக மக்களுக்கு மாற்று தொழில் தொடங்க கடன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மிகவும் வறுமையில் வாடி வரும் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள குறவர் சமூக மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மாநிலத் துணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.