கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்வு: மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு கும்பகோணம் பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;

Update: 2021-08-24 12:06 GMT

கும்பகோணம் மாநகராட்சியாகத் தரம்உயர்வு அறிவிப்பை இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு: கும்பகோணம் பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியான நிலையில், கும்பகோணத்தில் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு வருவாயை ஈட்டி தரக்கூடிய நகரமாகும். காவிரி - அரசலாறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866 -ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011 -ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர்.

1866 -ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் மூன்று மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2009- ம் ஆண்டிலிருந்து புதை சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கும்பகோணம் நகரம் வரலாற்று சிறப்புகளையும், பல அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பெருமையையும் கொண்டது. கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன், யானையடி தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் படித்தனர்.கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 30.9.2013ம் ஆண்டே நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர் நகராட்சி கடந்த 19.2.2014-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணமும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,  ஓரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகளாக இடம் பெற்றது. இதன் மூலம் கும்பகோணம் விரைவில் தனிமாவட்டமாக உருவாகும் என கும்பகோணம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தை மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் போராடி வந்த நிலையில், தற்போது முதற் கட்டமாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று,  திமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன் ஆகியோரது தலைமையில் திமுகவினர், உச்சிபிள்ளையார்கோயில் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இதுகுறித்து குடந்தை அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன் கூறுகையில்: பாரம்பரிய, கலாசார, தொன்மை வாய்ந்த நகரமான கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம், தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விரைவில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


Tags:    

Similar News