விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கல்
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், அண்ணலகராஹரம் ஊராட்சி, முகுந்தநல்லூர் கிராமத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது :முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டம் அந்த பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சு வார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்லசாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற் கட்டமாகும். இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும்.
அந்தவகையில் விளிம்பு நிலை மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர், அவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று உணவருந்தி, கோரிக்கைகளை தெரிந்து வந்தார். அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டுமெனவும், குறிப்பாக ஜாதி சான்றிதழ், வீடுஉள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், அண்ணலகராஹரம் ஊராட்சி, முகுந்தநல்லூரில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்று மாவட்டஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா,கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரிஅசோக்குமார், வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சூரியநாராயணன், உதவிபொறியாளர்கள் சிவப்பிரகாசம், .ஐயப்பன் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.