கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளி மர்ம மரணம்
கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் கலியபெருமாள் மகன் ஜெயராமன் (50). இவர் ஜாமியா நகர் 15வது குறுக்கு தெருவில் துபாயில் பணிபுரியும் சாகுல் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் 3 வருடங்களாக காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இதற்கு முன்பு 22 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் எனவும், தற்போது கடந்த 5 வருடமாக மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கும்பகோணத்தில் வசித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயராமன் இன்று காலை 10 மணியளவில் ஜாமியா நகரிலுள்ள கட்டிட வேலை நடைபெறும் வீட்டில் மர்மமான முறையில் தலையில் ரத்தக்காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் மகாலஷ்மி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இறந்துபோன ஜெயராமனின் உடல் இரண்டு நாட்களாக அந்த வீட்டில் இருந்ததாக கூறப்படுவதால் இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.