'இதுதாம்பா சமூக இடைவெளி' : செய்துகாட்டி அசத்திய கும்பகோணம் எம்எல்ஏ
கொரோனா பரவலை தடுக்க செயல்முறை மூலம் பொதுமக்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ விளக்கம் அளித்தார்.
கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ 1.25 கோடி மதிப்பீட்டில் 200 பெட்கள் மற்றும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரி, பெட் மற்றும் உபகரணங்கள் வழங்கியதற்கான சான்றிதழ்களை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடம் வழங்கினார்.
பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்பட உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நவீன இயந்திரத்தையும், மருத்துவமனை வளாகத்தையும் ஆய்வு செய்து கொரனோ நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் சார்பில் நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் உணவு பொட்டலங்களை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்குவதற்காக நின்றிருந்தனர்.அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் ஒருவர் பின் ஒருவராக நின்றிருந்தனர்.
இதனை அறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், வரிசையில் நின்ற பொதுமக்களிடம் இரு கைகளை முன்பும் பின்பும் நீட்டி செயல்முறை விளக்கம் செய்து இது போல் நிற்க வேண்டும் அப்போதுதான் சமூக இடைவெளி விட்டு நிற்க முடியும், கொரானோ தொற்று பரவாது என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.
எம்எல்ஏவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் அவர் கூறியபடி சமூக இடைவெளி விட்டு நின்றனர். பின்னர் ஒருவர் பின் ஒருவர் சமூக இடைவெளி விட்டு நின்றதையடுத்து, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் உணவுப் பொட்டலங்களை கொடுத்து, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.