கும்பகோணம் பகுதியில் வைக்கோல் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்கட்டு ரூ.450 வரை விற்பனையான வைக்கோல் தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகிறது;
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளுக்கு அறுவடை எந்திர தட்டுபாடு மற்றும் அறுவடை இயந்திர வாடகை உயர்வு போன்றவைகளால் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சம்பா அறுவடை முடித்துள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கியுள்ள வைக்கோல்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து கணிசமான வருவாய் ஈட்டலாம் என இருந்தனர். ஆனால் வைக்கோல்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்ட வைக்கோல் தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையானது. இந்த ஆண்டு வைக்கோலின் விலை மேலும் சரிந்து கட்டு ரூ.80-க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வயலில் சேகரமாகும் வைக்கோலை வைக்கோல் கட்டும் எந்திரம் மூலம் கட்டுகளாக கட்டுவதற்கு கொடுக்கப்படும் கூலிக்கு கூட வைக்கோல் விற்பனை ஆகாததால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் வைக்கோலை அப்படியே போட்டு வைத்துள்ளனர்.
காகித உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வைக்கோலை ஏற்றுமதி செய்வதன் மூலம் வைக்கோலுவுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கான வழிவகையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். வைக்கோலை நியாயமான விலைக்கு விற்பனை செய்யத் தகுந்த நடவடிக்கையை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.