சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
கும்பகோணம் அரசு மருத்துவமனை யில் தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு, இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நடத்தப்பட்டது;
தஞ்சாவூர் கும்பகோணம் அரசுப் பொது மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்திட திட்டமிடப்பட்டு. அதன்படி, மூன்றாம் கட்டமாக தஞ்சாவூர் கும்பகோணம் அரசுப் பொது மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கடந்த 23.02.2023 அன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் கட்டமாகவும், 09.03.2023 பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் இரண்டாம் கட்டமாகவும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீர்ப்பைப் பாதிப்பு தொடர்பான நவீன சிகிச்சை, ரத்த வகை கண்டறிதல்,கண் மற்றும் பல் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் தகுந்த ஆலோசர்களால் மறுவாழ்வு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், திருநறையூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் களம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், நாகரசம்பேட்டை மற்றும் விசலூர் ஊராட்சியில் பெருங்கடனுதவியாக மகளிர் சுய உதவிகுழுவினர்களுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் மரு.திலகம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.எஸ். நமச்சிவாயம், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபாதிருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .கே. வீரமணி, கே .முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.