சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்
சேலத்தில், கொரோனா தடுப்பூசி இல்லாததால், போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சேலம் மாவட்டத்தில், 230 மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 3,61,474 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். எனினும், சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாகுறையால் பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டு தடுப்பூசி இல்லை என்கிற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இன்று காலை முதலே திரளாக படையெடுத்து வந்தனர். ஆனால் தடுப்பூசி பற்றாகுறையால் 200 நபர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கொண்டு வந்த நபர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதில் பலர், ஒரு வாரமாகவே தினந்தோறும் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.