சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட உருவம்பட்டி ஊர்ப்பொதுமக்கள்
உருவம்பட்டி ஊர்பொதுமக்கள் தந்தைபெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதிநாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.;
தந்தை பெரியார் பிறந்த தினமான செப்.17 ஆம் நாளை ஆண்டு தோறும் சமூகநீதி நாள் ஆகக்கொண்டாடுவது என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் தந்தைபெரியாரின் பிறந்த நாளான இன்று செப்டம்பர் 17 ஆம் நாள் சமூக நீதிநாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உருவம்பட்டி ஊர்ப்பொதுமக்களிடம் ஆசிரியர் முனியசாமி பேசியதாவது: மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் இவை இரண்டும் தான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகள் ஆகும். அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம் ஆகும் என்றார். முடிவில் வார்டு உறுப்பினர் முத்தன் தலைமையில் உருவம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை உருவம்பட்டி ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.