சிறுவன் புகழேந்தி மரணம்: நார்த்தாமலையில் மதுபான கடைகள் அடைப்பு
துப்பாக்கி குண்டு பாய்ந்து, சிறுவன் புகழேந்தி இறந்த நிலையில், நார்த்தாமலையில் முன்னெச்சரிக்கையாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டன.;
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்து, அருகில் வீட்டில் இருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் காயமடைந்தான். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், கடந்த 5 நாட்களாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். எனினும், சிகிச்சை பலனின்றி, சிறுவன் புகழேந்தி இறந்துவிட்டான்.
இதனை அடுத்து நார்த்தாமலை, கொத்தமங்கலத்தில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியலை கைவிட்ட நிலையில் இன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் புகழேந்தியின் உடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அவனுடைய சொந்த ஊரான கொத்தமங்கலம்பட்டிக்கு வருகிறது.
இந்த நிலையில், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடையை அடைக்கப்பட்டன.