குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு
தெப்பக்குளத்தில் மீனுக்கு இறை போடும் போது குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விராலூரைச் சேர்ந்தவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா. இவர் மற்றும் இவரது தோழி யசோதா ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை விராலிமலை-மதுரை சாலையில் உள்ள நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையாக பொரி கடலையை குளத்து நீரின் நடுவே தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய லாவண்யா கால் தவறி குளத்து நீரில் விழுந்து தத்தளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்ற நீரில் குதித்த யசோதாவும் நீரில் மாட்டி தத்தளிக்க அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா இன்று உயிரிழந்தார். 18 வயதான மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகாயங்களுடன் யசோதா நலமுடன் உள்ளார். இறந்த லாவண்யா கடந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் 510 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.