புதுக்கோட்டை அருகே பெண்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்
புதுக்கோட்டை அருகே பெண்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டியில் புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் 5.5 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 528 வீடுகள் கொண்ட குடியிருப்பு ரூ.40 மதிப்பில் கட்ட கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு போடப்பட்ட நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பணிகளை தொடங்க வடசேரிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நிலம் அளவீடு செய்து, கட்டுமான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்கு வடசேரிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பு கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உறிஞ்சப்பட்டு வடசேரிபட்டியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்றும் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தில் பள்ளி, மருத்துவமனை போன்றவை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடர்ந்த நிலையில் புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு அதிகாரிகள் மேலும் அந்த இடத்தில் தொடர்ந்து பணிகள் செய்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.