டாஸ்மாக் கடையை அகற்ற எதிர்ப்பு; 20க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராகும். இந்த கிராமத்தில் சுமார் 3500 பேர் தினமும் கூலி வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் மன அமைதிக்காகவும் உடல் சோர்வுக்கும் அரசு மதுபானக் கடைகளில் குறைந்த விலையில் மது வாங்கி அருந்தி வருகின்றனர்.
ஏற்கனவே அன்னாவாசல் பகுதியில் சுமார் 6 ஆண்டுகாலமாக அரசு மதுபான கடை இல்லாத காரணத்தினால் மது பிரியர்கள் அன்னவாசல் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் சென்று மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வர வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வருபவர்கள் விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்து வரும் நிலையும் இருந்து வந்தது.
தற்போது தான் அன்னா வாசல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருவதால் மது பிரியர்கள் மது அருந்துவதற்கு ஏதுவாகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் மது வாங்கி அருந்தி வருகின்றனர்.
தற்போது இந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என ஒரு சிலர் தங்களின் சுயலாபத்திற்காகவும் அரசு மதுபான கடையை அகற்றிவிட வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்படி அகற்றிவிட்டால் இந்தப்பகுதியில் உள்ள ஒரு சிலர் கள்ளச்சந்தையில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பதற்கும் சுயலாபத்திற்காக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
எனவே அன்னாவாசல் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை எக்காரணத்தைக் கொண்டும் அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைத்து அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.