பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வடமாநில கூலி தொழிலாளி

வங்கிக்குள் தவறி விழுந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வட மாநிலத்தவர் உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

Update: 2021-07-13 14:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் தங்கராஜ். இவர் பண பரிவர்த்தனை தொடர்பாக விராலிமலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்துவதற்காக மஞ்சள் பையில் வைத்து 3 லட்சத்தி 50 ஆயிரம் பணம் எடுத்து சென்றுள்ளார். இதில் 25 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டு ரூ, 50 ஆயிரம் மஞ்சள் பைக்குள் இருந்து தவறி விழுந்துள்ளது இதை கவனிக்காத தங்கராஜ் வங்கி கவுண்டரில் பணத்தை செலுத்த முற்பட்டபோது தான் பணம் ரூ. 50,000 தொலைந்தது தெரியவந்தது. உடனடியாக கடையிலேயே பணத்தை வைத்து விட்டோமோ என்று பதறிக்கொண்டு கடைக்கு வந்த பார்த்தபோது கடையிலும் பணம் இல்லை. 

இதில் சந்தேகமடைந்த தங்கராஜ் பணம் காணாமல் போனது குறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் எந்த விவரமும் தெரியவில்லை. அதனை தொடர்ந்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தங்கராஜ் வங்கிக்குள் வருவதும் அவர் பையில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் தவறி விழுவதும் அதை குனிந்து ஒருவர் எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. 

இதனை தொடர்ந்து பணத்தை எடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணையை போலீசார் தொடங்கினர். இந்த நிலையில் வங்கியில் தவற விட்ட பணத்தை குனிந்து ஒருவர் எடுக்கும் சிசிடிவி காட்சி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து இதுகுறித்து அறிந்த பணத்தை எடுத்து சென்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் பணத்தை தவறவிட்ட தங்கராஜிடம் ரூபாய் 50 ஆயிரத்தை ஒப்படைத்தார்.  இவர் விராலிமலையில் தங்கி அங்கு உள்ள இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வரும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News