அதிமுக வேட்பாளருடன் வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இன்னாள் அமைச்சர்களும் அதிமுகவுக்கு முன்னாள் அமைச்சரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்;
புதுக்கோட்டை அருகே வேட்பாளருடன் வயலில் இறங்கி பெண்களுடன் நாற்று நட்டு வாக்கு சேகரித்தார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில்,திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, இன்னாள் அமைச்சர்களும் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக வேட்பாளர் அழகு சுந்தரிக்கு ஆதரவாக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். இதில் முத்துக்காடு பகுதியில் வாக்குகள் சேகரிக்க சென்ற போது, அந்த ஊரில் உள்ள பெண்கள் வயல்களில் நாற்று நட்டு கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் அழகு சுந்தரியுடன் வயலில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து நாற்று நட்டனர்.விஜயபாஸ்கர் நாற்று நடும் போது பெண்கள் குலவையிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் அவர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வயலில் நடவு பணிகளை மேற்கொண்டிருந்த பெண்களிடம் வாக்குகள் சேகரித்தார்.