உரம் பிரச்சினை: புதுக்கோட்டை கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் கடிதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரம் பிரச்சினையை தீர்க்க கோரி புதுக்கோட்டை கலெக்டருக்கு முன்னாள் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழையினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு அடைந்துவரும் நிலையில் தற்பொழுது தொடர் மழையை பயன்படுத்தி ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணியை துவங்கி உள்ளனர்.
ஆனாலும் அவர்களுக்கு முறையாக உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அரசு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிலும் போதிய உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர் .
இதனை சரி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியருக்கு உரங்கள் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் அதிக அளவில் குளங்கள் நிரம்பி உள்ளது இதனை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் விவசாயப் பணியை செய்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு போதிய உரங்கள் கிடைக்காமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி தங்கு தடையின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.