பள்ளி செல்லாத குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப கல்வி அலுவலர் நடவடிக்கை
பள்ளி செல்லாத குழந்தைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்க, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில், பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக அன்னவாசல் ஒன்றியம் காமராஜ் நகர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்பணியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்வி உதவித்தொகை பெற முடியாமலும், அரசுப்பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக வேதனையுடன் கூறினார்கள்.
இதை கேட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கூறி சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார். பின்னர் அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் என பள்ளி செல்லாமல் இருந்த 5 பேரை உடனடியாக வடசேரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரை வரவழைத்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர், அக்குழந்தைகளுக்கு சீரூடைகள், விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கினார்.
ஆய்வின்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் செங்குட்டுவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் தனபால், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ், தன்னார்வதொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.