மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள எழுவச்சிப்பட்டியில் சுமார் 200-குடும்பங்கள் வசித்து வருகின்றனர்;
மயானத்திற்கு மயானத்திற்கு சடலங்களைக் கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் குளத்து நீரில் கடந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள எழுவச்சிப்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்காக அந்த ஊரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராமத்தில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.
குளத்தை கடந்து சடலத்தை சுமந்து செல்லும் அவலம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.ஆனால், மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால், கிராமத்து மக்கள் அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி, மழையால் நிறைந்திருக்கும் கண்மாய் நீரை கடந்து பெரும் சிரமத்துடன் நடந்து சென்று 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
தங்களது துயரம் தொடரும் நிலையில், அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்துத் தரவேண்டும் அல்லது சாலை வசதி உள்ள இடத்தில் மயானத்தை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.