இணைய வழியில் கணினிப் பயிற்சி: மாவட்டக்கல்வி அலுவலர் நேரில் ஆய்வு
ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை செய்முறை பயிற்சியாக தாங்களாகவே கணினியில் செய்து பார்ப்பார்கள்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி ஆலோசனையின் பேரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-2022 -ஆம் கல்வியாண்டில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர்க்கும் வகையில், குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும் 5 நாட்கள் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பயிற்சி குறித்து அவர் மேலும் கூறியதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர்த்தல் மற்றும் கல்வி மேலாண்மை தளத்தில், மாணவர்களின் வருகைப்பதிவு, சேர்க்கை, நீக்கம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் இரண்டுகட்ட பயிற்சிகள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக வழங்கப்பட்டது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக, அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், செப்டம்பர் 6 முதல் 9 -ஆம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 11 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை, ஆசிரியர்கள் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து மட்டுமே மேற்கொள்வார்கள். ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை செய்முறை பயிற்சியாக, தாங்களாகவே கணினியில் செய்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்திலிருந்து செல்லுவதற்கு முன், அந்நாளுக்குரிய பின்னூட்டத்தினை கட்டாயமாக பதிவு செய்வார்கள் என்றார் அவர்.
ஆய்வின் போது, பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி,குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரி யை சாந்தாதேவி,பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அதே போல், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வடசேரிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் கணினி பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்துள்ளது. உரிய நேரத்தில் வருகை தந்துள்ளது குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் மொத்தம் 66 உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஏற்கெனவே பயிற்சியில் கலந்துகொள்ளாத முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 961 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.