விராலிமலை: விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம்
விராலிமலை அருகே, விநாயகர் சதுர்த்தி விழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சின்னபழனி பட்டியில் உள்ள சிறிய விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பாடல்களை இசைக்கவிட்டு, அதே கிராமத்தைச் சேர்ந்த எழில்வாணன், நந்தகோபால் மற்றும் சிலர் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நந்தகோபால் தெரியாமல் எழில்வாணன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியே நடந்து சென்று கொண்டிருந்த நந்தகோபால் தரப்பை சேர்ந்த லோகநாதன், எழில்வாணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, லோகநாதன் எழில்வாணனை தாக்கினார்.
இதனிடையே, எழில்வாணனுக்கு ஆதரவாக அதே கிராமத்தை சேர்ந்த சிலர் அங்கு வரவே, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், எழில்வாணன் தரப்பைச் சேர்ந்த கோபால், ஆறுமுகம், ராசு மற்றும் லோகநாதன் தரப்பை சேர்ந்த மூர்த்தி லோகநாதன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் விராலிமலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் சிறுவர், சிறுமிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் , எழில்வாணனையும் அவரது தரப்பை சேர்ந்த தங்கையாவையும் லோகநாதன் தரப்பை சேர்ந்த செல்வம் சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.