புதுக்கோட்டை அருகே தாய், தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் கைது
புதுக்கோட்டை அருகே தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே உள்ள நாட்டியன்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி(60)- வள்ளி(57) தம்பதியினருக்கு சங்கீதா என்ற ஒரு மகளும் பாலு, கோபிநாத் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ரெங்கசாமி-வள்ளி தம்பதியினர் தனது மகள் சங்கீதாவை திருச்சியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் இரண்டாவது மகன் பாலுவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி உள்ளனர்.
மூன்றாவது மகன் கோபிநாத் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு சென்ற பாலு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து வீட்டிலேயே தங்கினார்.
இந்நிலையில் தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி பாலு தமது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றும் அதே போல் தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என தனது தாய் தந்தையரான ரெங்கசாமி மற்றும் வள்ளியிடம் பாலு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பாலு வீட்டு அருகே உள்ள சமையல் கொட்டகையில் தந்தை ரெங்கசாமியையும் தாய் வள்ளியையும் ஆயுதத்தால் கழுத்தை அறுத்தும் அடித்தும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தனது வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதாக நண்பர் ஒருவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மண்டையூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து பார்த்த போது ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.
அப்போது அவரது மகன் பாலு ஒன்றும் அறியாதது போல் அங்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாலுவை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது தனது தாய் தந்தையரை கொடூரமாக கழுத்தை அறுத்தும் அடித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மண்டையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகனே தாய், தந்தையை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரில் சென்று நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கேட்டறிந்து அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
திருமணம் செய்து வைக்காததால்தான் பாலு தனது தாய் தந்தையை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.