டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மலை உச்சியில் ஏறி இளைஞர் பாேராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மலை உச்சியில் ஏறி போராட்டம் நடத்திய இளைஞரால் பரபரப்பு.;
பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோவிலில் பட்டதாரி இளைஞர் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மலையிலிருந்து குதிப்பதாக தற்கொலை முயற்சி. தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் அவரை மீட்க சுற்றிவளைத்து முற்றுகை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தேனிமலை அருகே சுப்புராயபட்டியில் வசித்து வரும் விவசாயி பழனிச்சாமி என்பவரது மகன் சண்முகம் 22. இவர் மேலைச்சிவபுரி உள்ள ஒரு கல்லூரியில் எம்.காம் படிக்கும் பட்டதாரி இளைஞர். இவர் தேனிமலை முருகன் கோவில் மலையிலிருந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், முற்றிலும் ஜாதியை ஒழிக்க வேண்டும், ஆரஸ்பதி, கருவேலம் மரங்களை அழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனிமலை முருகன் கோவில் மலையிலிருந்து குதிப்பேன் என கூறி தற்கொலை முயற்சி.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் மீட்புப்பணித் துறையினர் மலையிலிருந்து குதிப்பேன் என கூறிய பட்டதாரி இளைஞரிடம் பத்தடி தூரத்தில் முற்றுகையிட்டு மீட்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர் மீட்கப்பட்டு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.