ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் இன்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஏம்பல் கிராம வாரச்சந்தை, சுகாதார வளாகம், கிராம ஊராட்சி சேவை மையம் ஆகியவை பார்வையிடப்பட்டது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து சுயதொழில் புரிவோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கச்சேரி ஊரணி, மணியார் ஊரணி, மடத்தூரணி, வயலாங்குடி கண்மாய், அண்டக்குளம் போன்றவற்றை பார்வையிட்டு குளங்களில் உள்ள குப்பைகளை அகற்றவும், தேவையான இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.ஆர்.கே நகர் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், ஊர்ப்புற நூலகம், அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வு காணவும், வளர்ச்சித் திட்டப் பணிகளில் தேவையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.