திருமயம்: யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி கடையடைப்பு, மறியல் போராட்டம்

விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படும் நிலை நீடித்து வருகிறது

Update: 2021-08-31 05:29 GMT

யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம்.


திருமயம் தொகுதிக்குள்பட்ட அரிமளம் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடையடைப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில்யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என்பது விவசாயிகள் வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரின் பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த மரங்களுக்காக வனத்துறை மூலம் வரத்து வாரிகள் வெட்டப்பட்டு மழைக்காலங்களில் கிடைக்கும்  நீரை சேகரித்து வருகின்றனர். இதனால் அரிமளம் பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல்  சிரமப்படும் நிலை நீடித்து வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும் இன்று புதுக்கோட்டை அரிமளம் பகுதியில் அரிமளம் புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கடையடைப்பு  மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களிடம்  காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அரிமளம் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும். யூகலிப்டஸ் மரங்களுக்கு வனத்துறை மூலம் வரத்து வாரிகள் அமைக்கப்பட்டு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதைத் தடுக்க  வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News