தேர்வில் தோல்வியடைந்தால் மாணவர்கள் விரக்தி அடையக் கூடாது: சிவகங்கை எம்பி
ஒரு முறை தோற்றாலும் மறுமுறை வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்;
மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் விரக்தி அடைய கூடாது அவர்களுக்கு பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தனியார் பள்ளியில் மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தியது.
முகாமை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், மகளிர் நலம் காக்கும் இந்த மருத்துவ முகாமில் பெண்களின் தைராய்டு, ரத்தத்தில் இரும்பு சத்தின் அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மார்பக பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கு வந்த அனைவருக்கும் யோகா மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் மேலும் கூறியதாவது:மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் விரக்தி அடைய கூடாது. அவர்களுக்கு பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.ஒரு முறை தோற்றாலும் மறுமுறை வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் வளர்க்க வேண்டும். இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பு ஊசி 18 சதவீதம் பேர்தான் போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா மூன்றாவது ஆலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் .தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு அனைத்து வசதிகளும் இருந்தாலும், அதற்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். தற்போது பெண்கள் எல்லா துறையிலும் வளர்ந்து வருகின்றனர் . எனவே, பெண் குழந்தைகளை குறைவாக மதிப்பிடக் கூடாது என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ தெற்கு மாவட்ட தலைவர் ராம. சுப்புராம், நகரத் தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.