திருமயம் அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50), இவரது மனைவி மல்லிகா (40), உறவினர் லட்சுமணன் (62) ஆகியோர் திருமயம் அருகே அரண்மனைப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று ஒரே இருசக்கர வாகனத்தில் துக்கம் விசாரிக்க சென்றனர்.
இருசக்கர வாகனத்தை பழனிச்சாமி ஓட்டிச் சென்றார். அப்போது திருமயம் அடுத்துள்ள பெல் நிறுவனம் அருகே திருச்சி காரைக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது குறுக்கே மாடு வந்ததால் மாட்டின் மீது வாகனம் மோதி விடாமல் இருக்க தனது இருசக்கர வாகனத்தை திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் சாலையில் தூக்கி எறியப்பட்டனர்.
இந்த விபத்தில் பழனிச்சாமி, மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான நிலையில் லட்சுமணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் இன்ஸ்பெக்டர் தமிழரசி, உயிரிழந்த பழனிச்சாமி, மல்லிகா உடல்களை பிரேத பரிசோதனைக்கு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த இலட்சுமணன் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.