சிசிடிவி கேமரா வைக்க கூடாது என சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
திருமயம் அருகே உள்ள லேணாவிலக்கில் கடந்த சில நாள்களில் 8 -க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்;
சிசிடிவி கேமரா வைக்க கூடாது என சாலையில் உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள லேணாவிலக்கி கடந்த சில நாள்களில் 8 -க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலை யில், பொதுமக்கள் வேண்டுகோளையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்தப் பகுதியில் 4 சிசிடிவி கண்காணிப்பு கேமரா -க்களை பொருத்தியுள்ளனர். இந்நிலையில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் வைப்பதற்காக கம்ப்யூட்டர் அறை மற்றும் காவலர் பாதுகாப்பு அறை கட்டும் பணி தொடங்கியது.
பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அருகில், ஆவின் பால் பூத் வைத்திருக்கும் பழனியப்பன் என்பவர், தனது ஆவின் பால் பூத்துக்கு அருகே சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு அறை கட்டக்கூடாது என தகராறு செய்து தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து நமணசமுத்திரம் காவல்துறையினர் மற்றும் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர், தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பழனியப்பனிடம் பேச்சு நடத்தினர்.
இங்கு அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் நலன் கருதியே சிசிடிவி கண்காணிப்பு கேமரா வைக்கப்படுகிறது என்று எடுத்துக் கூறினர். ஆனால் பழனியப்பன் அதை கேட்காமல் சிசிடிவி அறை கட்டும் இடத்தில் பணியை செய்யவிடாமல் தரையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அறை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, அரசு இடத்தில் ஆவின் பால் பூத் வைப்பதற்கு பழனியப்பன் என்பவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அருகில் உள்ள இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு அறை அமைக்க அவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆகவே, அவருக்கு ஆவின் பால் பூத் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை காலி செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் ,பிறகு அந்த இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அறை அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.