சிங்கப்பூரில் வேலை- ரூ.30 லட்சம் மோசடி செய்த ஊராட்சி தலைவர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஆயிங்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வருபவர் ராஜமாணிக்கம்(38).இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சிவகங்கை,தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமத்தை சேர்ந்த காமேஸ்வரன்,புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையைச் சேர்ந்த மதுசூதனன், தஞ்சாவூர் மாவட்டம் மேலத்திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய 3 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்ததாக நகர காவல் நிலையத்தில் 420 ,406 மற்றும் 506 (2) ஆகிய பிரிவின் கீழ் ராஜமாணிக்கத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கு உள்ளதாகவும் இவர் மேல் இன்னும் பலர் இதேபோல் மோசடி புகார் கொடுத்துள்ளதாகவும் அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.