புதுக்கோட்டை:குழிபிறையில் நவீன வசதிகளுடன் நூலகம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையில் உள்ள பசுமை டிரஸ்டின் மூலம் ரூ 7 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட கிளை நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நூலகத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமில் 6 தாலுகாக்களில் மொத்தம் 189 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது தற்போது பொதுமக்கள் மத்தியில் கொரோணா குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.
இலங்கை தமிழர் 7 பேர் விடுதலை தொடர்பாக முந்தைய ஆளுநர் அவர்களால் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது இந்த விஷயத்தில் புதிய ஆளுநர் அழுத்தம் கொடுக்க முடியாது மாநில அரசு சார்பில் தமிழக முதல்வர் கடிதம் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடுதலை தொடர்பாக வலியுறுத்தி வருகிறார்.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. தேவைப்பட்டால் சட்டரீதியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஊராட்சித் தலைவர்களுக்கான பதவிகள் ஏலம் விடப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பேசிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.