கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறந்த திட்டம்: அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பொதுமக்களை பாதுகாக்கும் சிறந்த திட்டமாகும் என்றார் அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் நோயினை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.
அதனடிப்படையில் தற்போதை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் மீண்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றையதினம் அரிமளம் வட்டாரம், தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் சிறப்பு மருத்துவக் குழுவினர்களால் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, இருதய நோய், நீரிழிவு நோய், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.மேலும் மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மேல்சிகிச்சைக்கான பரிந்துரையும் செய்யப்படும்.
நோய்களை ஆரம்ப நிலைகளிலேயே கண்டறிவதன் மூலம் அதனை குணப்படுத்துவது எளிது. எனவே இப்பகுதி பொதுமக்கள் அதிக அளவில் தவறாமல் முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.இதுவரை 7 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2,856 நபர்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.
கிராமப்புறங்களில் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாக வந்து இம்மருத்துவ முகாம் நடத்தப்படும். பொதுமக்களின் உயிர் காப்பதற்கான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் சிறந்த திட்டமாகும்.இதனை அனைவரும் உரிய முறையில் பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.