சாலையில் நகையுடன் கிடந்த பை - போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
மலையளிக்புரம் பகுதி சாலையில், நகை, பணத்துடன் கிடந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரை பலரும் பாராட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலையளிக்புரத்தில், நேற்று மாலை 5 மணி அளவில் , மாலையிடு பகுதியைச் சேர்ந்த ரேணுகா தேவி என்பவர், ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகையுடன், பையை தவறவிட்டார். இதை அறியாமல் வீட்டிற்கு சென்ற ரேணுகாதேவி வண்டியில் வைத்திருந்த பை தொலைந்தது அறிந்து அப்பகுதி முழுவதும் சென்று தேடி உள்ளார்.
இதனிடையே, அந்த பையை ரோட்டில் இருந்து கண்டெடுத்த மலையளிக்புரத்தை சேர்ந்த திராவிட மணி என்பவர், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பையை பிரித்து பார்த்த காவல்துறையினர், முகவரியை வைத்து ரேணுகா தேவிக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வந்த ரேணுகாதேவியிடம், நமணசமுத்திரம் காவல்துறையினர் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த பையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த திராவிட மணியின் செயலை, ரேணுகாதேவியின் குடும்பத்தினர், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.