பொன்னமராவதி அருகே ஏனாதி கிராமத்தில் பள்ளம் தோண்டும்போது தங்க புதையல்
இந்த தங்க நாணயங்கள் முகலாயர் காலத்து நாணயங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் வீட்டிற்காக செப்டிக் டேங்க் தோண்டும்போது தங்க புதையல் சிக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே தொல்லியல் துறை சார்ந்த கோயில்கள் அதிகமான உள்ள மாவட்டம் ஆகும். இந்தப் பகுதிகளில் அதிக அளவிலான சங்க காலத்து கல்வெட்டுகள், தங்க நாணயங்கள் சிலைகள் என பல வகையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நடராஜன் - ஜெயலட்சுமி தம்பதிக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்க் கட்ட தோண்டும்போது புதையலாக பழங்காலத்து தங்க நாணயம் சிக்கியுள்ளது.
இதனால் ஆச்சரியமடைந்த தம்பதியினர் பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் தங்க நாணயங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 63 கிராம் தங்க நாணயங்கள் சிக்கியுள்ளது. இதை அடுத்து பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி நடராஜன் - தம்பதியினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த தங்க நாணயங்கள் முகலாயர் காலத்து நாணயங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குப் பிறகே எந்த நூற்றாண்டு, எந்த காலத்து நாணயம் என அறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.