திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம், பழைய கட்டிடம் உள்ளது. அதில், மருத்துவமனைக்கு தேவையான மிஷினரி சாமான்கள், பீஜிங் பார்டர், கொசு மருந்து நாப்கின்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்து புகை வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்த அலுவலர்கள், அருகில் சென்று பார்த்தபோது, கரும்புகையுடன் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள், திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே இருந்த அனைத்து சாமான்களும் எரிந்து சாம்பலாகி இருந்தன. அதன் மதிப்பு ரூபாய் 2 லட்சம் வரை இருக்கலாம் என தெரிய வருகிறது. இதுகுறித்து, அலுவலர்கள் மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தீ விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.