திருமயம் சப் - இன்ஸ்பெக்டர் வீரமணிக்கு, டிஐஜி சரவண சுந்தர் பாராட்டு
திருச்சி மண்டலத்தில் ஆடு திருடர்களை கண்காணித்து, பிடித்து ஆடுகளை பறிமுதல் செய்த திருமயம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணியை டிஐஜி சரவணசுந்தர் பாராட்டினார்.;
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆடு திருடும் கும்பல் திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்கு காவல்துறையினர் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக ஆடு திருடர்களைப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் ஆடு திருடர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள ஆடுகள் மற்றும் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 23.11.2021 முதல் 21.1.2022 வரை ஆடு திருட்டு தொடர்பாக காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 14, புதுக்கோட்டை மாவட்டத்தில் 14, பெரம்பலூர் மாவட்டத்தில் 5,கரூரில் 1 என மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.
ஆடு திருட பயன்படுத்திய 3 கார்கள்,2 சரக்கு ஆட்டோக்கள்,3 டூவிலர் என மொத்தம் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் உரியவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டு. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் தெரிவித்தார்.
மேலும் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான தனிப்படை போலீசாரை திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் ஆடு திருடும் கும்பலை மிக சாதுரியமாக அவர்களிடமிருந்து ஆடுகள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான காவல்துறைக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.