ஒன்றிய அரசு என கூறுவது தரக்குறைவான செயல்: பாஜக துணைத்தலைவர் மகாலட்சுமி
மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக கூறிவருவது மிகவும் தரக்குறைவான செயல் என பாஜக மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி கூறினார் .;
திருமயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி
பாஜக புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் திருமயத்தில் மாவட்டத் தலைவர் ராமசேதுபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது திமுக அரசின் தரக்குறைவான செயலையே காட்டுகிறது. பெண்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று சொல்லி வாக்கு வங்கியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. திமுக, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்ல உரிமை இருக்கும்போது, கொங்குநாடு என்று மாநிலத்தை பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் உண்டு. அவ்வாறு மாநிலத்தை பிரித்தால் தமிழக பாஜக அதை வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார. கூட்டத்தில் திருமயம் ஒன்றிய தலைவர் முருகேசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.