திருமயம் அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் சிலை கண்டுபிடிப்பு
திருமயம் அருகே மண் வெட்டும் போது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பாென்னாலான அம்மன் சிலை கண்டறியப்பட்டது.;
வயலில் மண் வெட்டும் போது கண்டெடுக்கப்பட்ட இரண்டடி உயரமுள்ள அம்மன் சிலை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வயலில் மண் வெட்டும் போது இரண்டடி உயரமுள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பாப்பா வயல் பகுதியைச் சேர்ந்த செம்பையா என்பவருக்கு சொந்தமான வயலில் நேற்று கருவேல மரம் அகற்றுவதற்காக மண் தோண்டப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக மண்ணுக்குள் இருந்து சிலை ஒன்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரியிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார், பணியாளர்கள் உதவியோடு மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்தனர். முதல்கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலை பல நூறு ஆண்டு பழமையான அம்மன் சிலை எனவும், 2 அடி உயரம் ஐம்பொன் சிலையாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.