தேக்காட்டூர் பகுதியில் பெய்த மழையில் நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்

Update: 2022-01-02 07:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேக்காட்டூர் பஞ்சாயத்தில் விடியவிடிய நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதை காட்டும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட தேக்காட்டூர் ஊராட்சிப்பகுதியில்  நேற்று இரவு பெய்த மழையில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

2022 ஆம் ஆண்டு முதல் நாள் துவக்கமே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழையுடன்  துவங்கியது. குறிப்பாக சென்னை வானிலை மையம் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

குறிப்பாக புதுக்கோட்டை அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாராக வளர்ந்து நின்ற நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நீருக்குள் சாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக தற்போது முழங்கால் அளவிற்கு தண்ணீரில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிய உள்ளதால், மீண்டும் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து மழை நீடித்தால் 500 ஏக்கரில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விடும். 

இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.  நகைகளை அடகு வைத்து, கடன் வாங்கி தற்போது விவசாயம் செய்த நிலையில்,   தொடர் மழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News