திருமயம் அருகே உள்ள மலையக்கோவில் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மலையக்கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில் விரதம் இருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையின் காரணமாக பொதுமக்கள் விரதமிருந்து காவடி எடுத்து குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் பாதயாத்திரையாக நடந்து சென்று முருகனுக்கு காணிக்கை செலுத்தினர்.
பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானை சுவாமிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மலைக்கோவிலில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியின் போது பொதுமக்கள் அனைவரும் வாழைப்பழத்தை தூக்கி தீர்த்தவாரி குளத்தில் வீசி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.