தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்: உ. வாசுகி
பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோவிட் தொற்று பரவுவதற்கு சமூக இடைவெளியைக்கடைபிடிக்காததே காரணம்;
தமிழகத்தில் 9 முதல்12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறக்கப்பட்டவுடன், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு தொடக்க மற்றும் (1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை) நடுநிலைப்பள்ளிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு நன்றாக யோசித்து எடுக்க வேண்டும் என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவி உ. வாசுகி.
புதுதில்லியில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி, புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவி வாசுகி தலைமை வகித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: புதுல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு மௌனம் காக்கிறது. இஸ்லாமிய பெண் என்பதால், மத்திய அரசு மௌனம் காக்கிறது என்று கருத வேண்டியுள்ளது.உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7 மாதத்தில் 100 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்தது.
ஆனால், அந்த கோரிக்கையை அப்போதைய அரசால் நிராகரிக்கப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து, பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் நடப்பதைத் தடுப்பதற்கு, ஒரு புதிய கொள்கை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். அதிகாரிகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்தக் கொள்கைகளை உருவாக்க கூடாது. பெண்கள் அமைப்பை கலந்து ஆலோசித்தபிறகே, கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்கு, புதிய கொள்கை ஒன்று தமிழக அரசு உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தொற்று பரவி வருகிறது.சமூக விலகலை அவர்கள் கடைபிடிக்காததே முக்கியக் காரணம்.எனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளைத் திறப்பதில் அரசு நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் உ. வாசுகி.