விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது; பிரியாவிடை தந்த மக்கள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது; மனிதர்களுக்கு செய்வது போலவே இறுதிச்சடங்கு நடத்தி, பொதுமக்கள் பிரியாவிடை தந்தனர்.;

Update: 2021-10-12 10:30 GMT

வயது மூப்பால் இறந்த ஜல்லிக்கட்டு காளை, வெள்ளைக்கொம்பனுக்கு மாலைகள் அணிவித்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. 

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர், நான்குக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார் இதில் ஒன்றுதான் வெள்ளைக் கொம்பன் காளை. இந்த காளை, சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட போட்டிகளிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று, களத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களை திணறடித்து பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில்,  வயது மூப்பு காரணமாக வெள்ளைக் கொம்பன் காளை,  விஜயபாஸ்கரின் சொந்த கிராமமான ராப்பூசலில் நேற்று இரவு உயிரிழந்தது. இதனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் சோகத்தில் மூழ்கினார்.

வெள்ளை கொம்பன் காளைக்கு, இறுதி அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பலர். 

இதையடுத்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், உள்ளூர் பிரமுகர்களும் இறுதி மரியாதை செய்தனர். பின்னர்,  ஜல்லிக்கட்டு வெள்ளைக் கொம்பன் காளை,  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன. மனிதர்களுக்கு நடப்பது போன்றே வெள்ளைக் கொம்பன் காளைக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, வெள்ளை கொம்பனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Tags:    

Similar News