குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

தினந்தோறும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைமை உள்ளது

Update: 2021-09-23 10:41 GMT

ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில் உள்ள திருவாந்தவயல் கிராமத்தில் குடிநீர்கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீர் தட்டுப்பாட்டைக்கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில் உள்ள திருவாந்தவயல் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் சரியாக வருவதில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று ஆவுடையார்கோயில் கரூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து திருவாந்தவயல் கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் கடந்த ஐந்து வருடமாக சரியான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீருக்காக  நாங்கள் தினந்தோறும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல  வேண்டிய நிலைமை உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் எங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்றால் , புதுக்கோட்டை திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத்தவிர வேறு வழியில்லை  என்றனர்.

Tags:    

Similar News