புதுக்கோட்டை அருகே நகையை திருடிய வீட்டில் மிளகாய் பொடி தூவிய திருடர்கள்

இந்த வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்;

Update: 2021-12-27 10:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோபால பட்டினத்தில் தொழிலதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவத்தில் சிதறிக் கிடக்கும் பொருளகள்

புதுக்கோட்டை அருகே  வீட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த  வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு  திருடர்கள் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை டிவிஎஸ் அருகே ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில்  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கோபாலபட்டிணத்தில் வசித்து வரும் ஜாபர் சாதிக் என்பவர் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். இவருடைய வீடு பூட்டி நிலையில் இருந்து வருகிறது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வீட்டிற்கு வரும் ஜாபர் சாதிக் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் தங்கி விட்டு மீண்டும் வெளிநாடு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் பீரோ மற்றும் பல்வேறு இடங்களில்  வைத்திருந்த   நூற்றுக்கும் மேற்பட்ட பவுன் நகைகளை கொள்ளையடித்த பின்னர், போலீஸார் தடயங்களை கண்டுபிடித்து விடக்கூடாது  என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு  சென்றனர்.

இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை பார்த்த அருகில் இருந்த அவருடைய நண்பர், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் பொழுது அவருடைய நண்பர் ஜாபர் சாதிக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டில் 850  பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நகை கொள்ளையடிக்கப்பட்ட  வீட்டை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து தடயங்களைத் தேடி வருகின்றனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கோபாலபட்டினத்தில் 850  பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



Tags:    

Similar News