இடி சப்தம் கேட்ட அதிர்ச்சியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெண் பலி

Update: 2021-08-22 18:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையில் இடி விழுந்த அதிர்ச்சியில் ஆடு மேய்த்துகொண்டிருந்த  பெண்  ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அறந்தாங்கி தாலுகா, ரெத்தினக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சொக்கநாதன் மனைவி ஜோதி (60). இவரும்  அதே ஊரைச் சேர்ந்த லலிதா (80) என்ற மூதாட்டியும்  ஆகிய இருவரும் அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். ஆடு மேய்த்து கொண்டிருக்கையில், திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கியுள்ளது. இதில்  சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

உடனிருந்த லலிதா மயக்கமடைந்துள்ளார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல்துறையினர் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக,  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மயக்க நிலையில் இருந்த லலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆடு மேய்க்க சென்று பெண் ஒருவர் இடி விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News