அடிக்கடி மின்வெட்டு - அறந்தாங்கி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே, தொடர் மின்வெட்டால் ஆவேசமடைந்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ராஜேந்திரபுரத்தில், 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக, சில ஆண்டுகளாகவே, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜேந்திரபுரம் பகுதியில் சீரான மின்சார வினியோகம் செய்யக்கோரி, அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், 15 நாட்களுக்குள் நிலைமை சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியலால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.