புதுக்கோட்டை அருகே காணாமல் போன 2 சிறுவர்கள் குளத்தில் சடலமாக மீட்பு
புதுக்கோட்டை அருகே திருநாளூரில், காணாமல் போன இரண்டு சிறுவர்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.;
அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி இறந்துபோன சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாளூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர், கற்பூரசுந்தரேஸ்வரபாண்டி. இவரது மகன்கள் ஆறு வயதான நிவாஸ் பாண்டி மற்றும் நான்கு வயதான வித்திஸ் பாண்டி. இரண்டு சிறுவர்களையும் நேற்று காலை முதல் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு சிறுவர்களும் வீட்டின் அருகே உள்ள குளத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் இறந்து போன தகவல் அறிந்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நேரடியாக குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஐம்பதாயிரம் நிதியுதவி அளித்தார். குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.