புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பச்சலூர் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், பச்சலூர் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன்காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளித்து அரசு திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆனையின்படி, பச்சலூர் கிராமத்தில் முதன்முதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். பச்சலூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன் மாணவர்களின் கல்வித்திறனை கேட்டறிந்து பாராட்டினார்.
மேலும் இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு நடைபெற்றதையும், மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்வதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.