வீட்டின் மீது மரம் விழுந்து சேதம்: குழந்தைகளுடன் தவிக்கும் கூலி தொழிலாளி
வீட்டின் மீது மரம் விழுந்து சேதம் அடைந்ததால் குழந்தைகளை வைத்துக் கொண்டு வீடு இல்லாமல் தவிக்கும் கூலி தொழிலாளி.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஏகனிவயல் கிராமத்தில் பாஸ்கர் அருள்மேறி என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஓலைக்குடிசை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் சிறுக சிறுக பணம் சேர்த்து ஓட்டு வீடு ஒன்று கட்டி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிபெயர்ந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலான இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையில் பாஸ்கர் அருள்மேரி வீட்டின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான தேக்கு மரம் வீட்டின் மேல் சாயந்து விழுந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உயிர் தப்பினர்.
இதுகுறித்து பாஸ்கர் அருள்மேறி கூறுகையில் சிறிய சிறிய பணம் சேர்த்து ஆசையாக கட்டிய வீடு மரம் விழுந்து சேதமானது மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் மற்றும் அரசு வழங்க கூடிய கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.