7.5 % இடஒதுக்கீட்டில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு
சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவா 514 மதிப்பெண்கள் பெற்று 7.5 % ஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்துள்ளார்
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவனை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சிவா என்ற மாணவருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, இன்று நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவா 514 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதலிடம் பிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவரை பாராட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மாணவன் சிவாவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஐயப்பன், புனிதா, மாணவனின் ஆசிரியர்கள் ஆகியோர் அனைவருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.